திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி சுமந்து பம்பை உடுக்கை சத்தத்துடன், பக்தி பாடலுக்கு நடனம் ஆடி அரோகரா முழக்கத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா நாளை மறுநாள் 4 தேதி தொடங்கி 5 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய விழாவான 6ம் தேதி ஆடி கிருத்திகையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் முன்னதாகவே இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்து காவடிகள் சுமந்து பம்பை உடுக்கை மேளதாளங்கள் முழங்க பக்தி பாடலுக்கு நடனம் ஆடிய படி சுவாமி தரிசனம் செய்தனர்.

100 ரூபாய் கட்டண வழியில் இரண்டு மணி நேரமும், பொது தரிசன வழியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா அரோகரா என பக்தி முழுக்கத்துடன் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
இதனால் மலைக்கோவிலில் காவடியின் மணி சத்தம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

